×

அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோம்பையில் இன்று திருக்கார்த்திகை தீபம் சோலைமலை முருகன் கோயிலில் நாளை ஏற்றப்படும்

அலங்காநல்லூர், நவ.22: அழகர்மலை உச்சியில் இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. நாளை சோலைமலை முருகன் கோயிலில் தீபம் ஏற்றப்படும். மதுரை மாவட்டம், அழகர்மலை அடிவாரத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் உள்ள வெள்ளிமலை கோம்பை என்ற இடத்தில் திருக்கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. இதற்காக 6 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பிரத்தியோக தாமிர தீபகுண்டம் மலைப்பாதை வழியாக சுமந்து கொண்டு செல்லபடும். இதில் தீபம் ஏற்றுவதற்காக பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்ட துணிதிரி மற்றும் பக்தர்களிடம் இருந்து உபயமாக பெறப்பட்ட 400 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
காற்று, மழையில் அணையாதவாறு எரியும் அளவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அழகர்மலை உச்சியில் தீபம் ஏற்றிய பின்னர்தான் அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவதை இன்றளவும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். தொடர்ந்து கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்படும்.

இதேபோல் அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன்கோயிலில் நாளை மாலை திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்று கோயில் ராஜகோபுரம் முன்பு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி எழுந்தருள்வார். கார்த்திகை திருநாளையொட்டி விஷேச பூஜைகள் நடைபெறும். தீபம் ஏற்றியவுடன் மேள, தாளம் முழங்க சொக்கப்பனை கொளுத்தப்படும் திருக்கார்த்திகை தீப விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Tags : Tirukkarthi Deepam ,Sulaimalai Murugan Temple ,
× RELATED வைகையாறு செல்கிறதா கழிவுநீர்… மதுரை...